You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தனியார் கட்டணப் பள்ளிகளை இலவசப் பொதுப்பள்ளிகளாக மாற்றவேண்டும் - கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை

தனியார் கட்டணப் பள்ளிகளை இலவசப் பொதுப்பள்ளிகளாக மாற்றவேண்டும் - கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை

சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி தமிழ்நாட்டில் மலர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சமூக நீதிக்கு அடையாளமாக சமத்துவபுரங்கள்  உருவாக்கப்பட்டன. தமிழகமே சமத்துவபுரமாக மாறவேண்டும் என்பதே திமுகவை மீண்டும் ஆட்சியில் அமரவைத்துள்ள மக்களின் விருப்பம். 

சமூகப் பாகுபாடுகளை ஒழித்து சமத்துவத்தை வளர்ப்பதில் பள்ளிகளுக்கு முதன்மை இடம் உண்டு. 1950 இல் நாட்டை சமயசார்பற்ற, சமதர்ம, மக்களாட்சிக் குடியரசாக அறிவித்தோம். அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 30 ஆயிரம் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பல்வேறு சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்த மக்களின் பிள்ளைகள் அனைவரும் முதன்முதலாக ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் அமர்வதை அரசுப் பள்ளிகள் தான் சாத்தியமாக்கின. மின்சார வசதி கூட இல்லாத நூறு பேர் வசித்த குக்கிராமங்களில் கூட அரசுப் பள்ளிகள் மூலம் கல்வி வெளிச்சம் பாய்ந்தது. பாகுபாடுகள் மண்டிக் கிடந்த கிராமங்களில் அரசுப் பள்ளிகள் மூலம் சமத்துவம் சாத்தியமானது. திமுகவின் சமூக நீதிக் கொள்கையை காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் நிலைநாட்டின.   

சமத்துவப் பள்ளிகளாக இருந்த அரசுப் பள்ளிகள் இன்று அடித்தட்டுப் பிள்ளைகளின் பள்ளிகளாக மாறியுள்ளன. வசதியுள்ளவர்களின் பிள்ளைகள் தனியார் கட்டணப் பள்ளிகளில் படிக்கின்றனர். கல்வி வணிகர்களிடம் கருப்புப் பணம் பெருகிக்கொண்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினால் சமூக நீதிக்கு கேடு விளைவதைப் பெரிதாகப் பேசுகிறோம். ஆனால், கல்வியை வணிகர்களிடம் ஒப்படைத்ததால் மழலையர் கல்வி தொடங்கி ஒட்டுமொத்தக் கல்வியிலும் சமூக நீதி ஒழிந்துவிட்டதைப் பேசத் தவறுகிறோம்.

ஏழைகள் விலையின்றி பெரும் கல்வியும் வசதியானவர்கள் விலைகொடுத்துப் பெரும் கல்வியும் சமமற்றதாக உள்ளன. கல்வியைத் தனியார் வணிகர்களிடம் தாரைவார்த்ததால் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது. கல்வி உரிமைச் சட்டம் 2009 மூலம் தனியார் கட்டணப் பள்ளிகளில் 25% அளவிற்கு நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் சேர்ந்து அரசின் கட்டணத்தில் படிக்க வழி செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இச் சட்டங்கள் மூலம் கல்வி வழங்குவதில் சமமற்ற நிலை நீடிப்பதையும்  ஏழைகளுக்கு சமூக அநீதி இழைக்கப்படுவதையும் முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. பின்னோக்கிய ஆய்வற்ற, தொலை நோக்குப் பாரவையற்ற வாக்கு வங்கிச் சட்டங்கள் இவை.  ஏழைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையினரை மிகக் குறைவான கல்வி வாய்ப்புகளைப் பெறச் செய்வதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது.

அனைவரும் சமமான மதிப்புகளோடும் மாண்புகளோடும் வசதிகளோடும் வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் ஏற்ற கல்வி அமைப்பை காலம் கடந்தாவது உருவாக்க வேண்டும். பல்வேறு வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் அருகமைப் பள்ளி அமைப்பிலான பொதுப்பள்ளி முறையைத் தமிழ்நாட்டிலும் உருவாக்கவேண்டும். ஜனநாயக நெறிப்படியான இப் பள்ளி அமைப்பு முறையை 1966 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் கல்விக் குழுக்களும் வலியுறுத்தியுள்ளன.       

தனியார் அறக்கட்டளை முதலீட்டில் நிறுவப்பட்டு பெற்றோர்களின் கல்விக் கட்டண நிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளை அரசு நிதியில் இயங்கும் கட்டணமில்லாப் பள்ளிகளாக மாற்றி அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டிலும் பொதுப்பள்ளி முறையை சாத்தியமாக்க முடியும். இதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய தமிழ்நாடு அரசு உடனடியாக கல்வி வல்லுனர் குழுவை அமைக்கவேண்டும் என வேண்டுகிறோம்.    

இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தொடர்புக்கு - 9965128135, moorthy.teach@gmail.com.