தமிழகத்தில் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ஒரு சில இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அந்த வகையில், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 4 ஆசிரியர் மற்றும் ஒரு மாணவிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சக ஆசிரியர்கள், மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, அந்த பள்ளியில் உள்ள 64 ஆசிரியர்கள், 60 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மேலும் 4 ஆசிரியர்கள் மற்றும் 1 மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகாித்து வருவது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.