கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த மாணவிக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிைள உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அரியூரைச் சேர்ந்த ஷகிலாபானு, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதால் எனது மகள் ஷபானாவை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டு, ஆறாம் வகுப்பு வரை படித்தார். ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தார்.
கடந்த 2018-19ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 539 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, காமராஜர் விருதும் வழங்கப்பட்டது. அந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 203 மதிப்பெண் பெற்றார்.
மீண்டும், 2019-20ல் நடந்த நீட் தேர்வில் 425 மதிப்பெண் பெற்றார். இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிலை இருந்தது. ஆனால், விண்ணப்பத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்தது மற்றும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தது என்ற இரு பிரிவுகள் மட்டுமே இருந்தது.
இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டின் கீழ் என்னால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனக்கான வாய்ப்பு பறிபோயுள்ளது. அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தான் தனியார் பள்ளியில் படித்தேன். எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு மருத்துவ படிப்பில் வாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும்,
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி வீ.பார்த்திபன் விசாரித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீசரண்ரங்கராஜன் ஆஜராகி, மனுதார் மகள் கவுன்சிலிங் பங்கேற்றார். அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ்-பிடிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. மனுதாரர் மகள் பெயர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.
வக்கீல் ரமேஷ் ஆஜராகி, உரிய தகுதி இருந்தும் வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது, என்றார்.
இதையடுத்து நீதிபதி, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு முறையில், மனுதாரர் மகளுக்கு சீட் வழங்க அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த கல்வியாண்டில் வழங்கு முடியாவிட்டால், அடுத்த கல்வியாண்டில் பிசி(மு) பிரிவில் ஒரு சீட்டை முன்பதிவு செய்து வைத்து வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.