கடந்த டிசம்பர் மாதம், தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படிப்படியாக வகுப்புகள் திறக்க நடவடிக்கை எடுத்தது. கடந்த டிசம்பர் 7ம் தேதி, பல்கலைக்கழகம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதற்கிடையில், சமீபத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கான அனைத்து வகுப்புகளும், விடுதிகளும் வரும் 8ம் தேதி முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், உயர் கல்வி செயலாளர் அபூர்வ, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கோவிட் -19 தொடர்பாக தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி நிறுவனங்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், கல்வியாண்டு இறுதி வரை, ஆறு வேலை நாட்களாக கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் எனவும், மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சென்னை தனியார் கல்லூரி மாணவி, தீக்ஷா கூறும்போது, கடந்தாண்டு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்தேன். பல மாதங்களுக்கு பின் கல்லூரிக்கு செல்வது ஒரு விதமான உற்சாகத்தை கொடுக்கிறது. புதிய நண்பர்களையும் காண உள்ளேன். அதே சமயத்தில், ஆறு நாட்கள் கல்லூரி என்பது சற்று வருத்தமாகத்தான் உள்ளது. ஆறு நாட்களாக பதிலாக ஐந்து நாட்கள் கல்லூாி இருந்திருந்தால் மாணவர்களுக்கு நன்றாக இருந்திருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.