தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 7 பி.எட் அரசு கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. NCTE எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கழகம் விதியின்படி, மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப, பேராசிரியர்கள் கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும்.
ஆனால், உயர்கல்வித்துறை அலட்சியத்தால், பணி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பணியிடங்களில் புதிய பேராசிரியர்களை நியமிக்காமல், பல ஆண்டுகளாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. இதற்கிடையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கழகம், அவ்வப்போது இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு அரசு பி.எட் கல்லூரிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி வந்த நிலையில், கடந்தாண்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த விதித்து உத்தரவிட்டது. இதனால், பி.எட் கல்லூரியில் சேர விண்ணப்பித்த பல ஏழை எளிய மாணவ, மாணவிகள் வேறு வழியின்றி, கொரோனா காலத்திலும், அதிக பணம் கொடுத்து தனியார் கல்லூரியில் சேர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தனை ஆண்டு காலமாக, உரிய இடங்களில் பேராசிரியர்கள் நியமிக்காததே இவ்வளவு இடர்பாடு நிகழ்ந்துள்ளதாக கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக உயர்கல்வி அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன், உயர்கல்வித்துறை செயலர், இயக்குனர் ஆகியோர் ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் நன்றாக விளையாடிவிட்டதாக அவர்கள் தெரவிக்கின்றனர். நீட் தேர்வுக்கு குரல் கொடுக்கும் பல அரசியில் கட்சிகள் இதுபோன்ற படிப்புகள் தமிழகத்தில் இருக்கிறதா, இல்லையா என்பது கூட தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என கூறுகின்றனர். முடிவாக, பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை கூறிய உத்தரவாதத்தின் அடிப்படையில், தற்போது, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கழகம் இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் பலா், தனியார் கல்லூரிக்கு சென்றதால், அரசு கல்லூரியில் சேர காத்திருந்த மீதம் இருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வின்றி, பிப்ரவரி மாதம் மாணவர் சேர்க்கை நடத்தி நடப்பு கல்வியாண்டிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தற்போது, 7 பி.எட் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரம் இடங்களில், 850 பேர் மட்டுமே சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்கள் கல்வியில் எப்படியெல்லாம் விளையாட முடியும் என்பதில் பி.எட் கல்லூரிகள் ஒரு உதாரணமாக இருக்கிறது. எதிர்வரும் அரசாவது, மாணவர்கள் கல்விக்கு மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.