தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
விடுதியின் ஆண்டு வரவு, செலவு கணக்கு தொடர்பாக அரசு ஆடிட்டர்கள் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் போலி பில்கள் தயாரித்து லட்சகணக்கான நிதியை மோசடி செய்தது அம்பலமானது.
மேலும் கேர் டேக்கர் எனப்படும் பதவியில் பணியாற்றி வந்தவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த பிறகும் அவர்களின் பெயரில் கையெழுத்திட்டு, சம்பள பணத்தை எடுத்து வந்ததும் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் விவரங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 17 லட்சம் வரை இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை முதன்மை கணக்கு அதிகாரி குழுவினர் கடந்த மாதம் நேரில் விசாரணை நடத்தி சென்றனர்.
அதன்படி ஈரோடு மாணவிகள் விளையாட்டு விடுதியின் மேலாளர் சாந்தியை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேற்று உத்தரவிட்டார்.