கொரோனா தொற்றால், நாடு முழுவதும் நெருக்கடி நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவால், அன்பானவர்களை நாம் இழந்து வருவது, மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசும் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஜாக்டோ – ஜியோ ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினர், சிறுவர்கள், நல் உள்ளங்கள் படைத்த பொதுமக்கள் என அனைவரும் ஓரணியில் நின்று, இந்த தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக, தங்களால் இயன்ற வரை நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், கஷ்டத்தில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு பக்க பலமாக நிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களும் தங்களால் இயன்றவரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, இவர்கள் பலர் வேலையில்லாமலும், தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்களே. அவர்களிடம் பணம் இல்லையோ, மனம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளனர். அவர்களது இலக்காக, ரூ. ஒரு லட்சம் செலுத்த தமிழ்நாடு வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போது, அச்சங்கத்தின் உறுப்பினர் கிட்டதட்ட ரூ.15 ஆயிரம் வரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர்.