சென்னை, மழலையர் கல்வி பூர்த்தி செய்வதில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. நாளடைவில், காசு பார்க்கும் நோக்கில், பலா் சந்துக்கு சந்து மழலையர், அதாவது நர்சரி, பிரைமரி பள்ளிகளில் தொடங்கினர். இதில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் உள்ளிட்ட ஆரம்ப வகுப்புகள் குழந்தைகளுக்கு நடத்தப்படும்.
குறிப்பாக, இதுபோன்ற பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்றால், சம்மந்தப்பட்ட பள்ளி உரிமையாளர் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, பள்ளி அங்கீகாரம் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், கல்வி அலுவலர்கள் பள்ளியின் பள்ளி வாடகை கட்டிடமா, சொந்த கட்டிடமா, மாணவா்களுக்கு வகுப்பறையில் உரிய காற்றோட்ட வசதி உள்ளதா, கழிப்பறை வசதி உள்ளிட்டவை உள்ளதா என ஆய்வு செய்வார்கள். மேலும், தனியார் பள்ளி துவங்கும் உரிமையாளர் கட்டிட சான்றிதழ், தீயணைப்பு துறை சான்றிதழ், சுகாதார சான்றிதழ் உள்ளிட்டவை சமர்பிக்க வேண்டும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின், தனியார் பள்ளிகளுக்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. இதனை அமல்படுத்த முடியாத, உரிமையாளர்கள் பள்ளி கல்வித்துறையிடம் அங்கீகாரம் பெறாமல், பள்ளிகளை நடத்த தொடங்கினர். இதை சாதகமாக்கி கொண்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், பல தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை நடத்திக்கொண்டு, அதுபோன்ற பள்ளிகளை தொடர்ந்து செயல்பட அனுமதித்தினர். பெயரளவில் ஒன்றுக்கும் உதவாத ஒரு ஆண்டில் மூன்று முறை நோட்டீஸ் வழங்குவது, அவர்கள் பதில் கடிதம் எழுதுவது, அதற்கு வட்டார கல்வி அலுவலர்கள் முதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வரை லஞ்சம் பெறுவது அப்படியே அங்கீகாரம் பெறாத பள்ளிகளை அனுமதித்தினர். முக்கிய நகரங்களில் மட்டும் சுமார் 100 முதல் 150 வரை அங்கீகாரம் இல்லாமல்தான் செயல்பட்டு வருகிறது. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, மூடி சீல் வைக்காமல், அதிகாரிகள் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அதிரடியாக, அங்கீகாரம் பெறாத, அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகளை மூட வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த உத்தரவால், ஊழல் அதிகாரிகள் ஊமையாகியுள்ளனர். மேலும் மாணவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கல்வி உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததோடு, தங்களது கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல், மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிளை உண்மையாகவே மூடியுள்ளனாரா அல்லது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.