தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2021-22 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்தாா். பள்ளி கல்வித்துறை அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.
பள்ளிக்கல்வி: குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமையாகும். எனவே, பள்ளிக் கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 34,181.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-12ஆம் ஆண்டு முதல் 273 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 127 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 1,115 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 644 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வியில் மாணவர் நிகர சேர்க்கை விகிதம் 99.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. பள்ளி இடைநிற்றல் விகிதம் 0.75சதவீதமாகக் குறைந்துள்ளது. மதிய சத்துணவு, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், மடிக்கணினிகள், சீருடைகள், காலணிகள், பள்ளி புத்தகப்பைகள், கிரையான்கள், வண்ண பென்சில்கள், வடிவியல் பெட்டிகள் மற்றும் நிலவரைபடப்புத்தகங்கள், இலவசப்பேருந்து அட்டை மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்குதல் போன்றவை தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்தத்திட்டங்கள் தொடர்வதற்காக, 2020-21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மொத்தம் 3,703.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம், 2009, பிரிவு 12(1)(உ)இன் படி, இதுவரை 5,61,111 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, மொத்தம் 1,324.28 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் தனியார் பள்ளிகளுக்கு திருப்பியளிக்கப்பட்டுள்ளது. கோவிட் - 19 பெருந்தொற்று காலத்தில், மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடப்புத்தகங்களை அரசு வழங்கியது. 12ஆம் வகுப்பிற்கு, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912வீடியோ பாடங்கள்,மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் 4,20,624 மாணவர்கள் பயனடைந்தனர். 5,522 வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அரசின் சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. மாணவர்களுக்கான பாடங்கள் பல்வேறு இணையதளங்களில் மின்னணு தொகுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வாயிலாக தரமான கல்வியை, பள்ளிகளில் வழங்குவதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத்திட்டத்தின்ஒரு பகுதியாக தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 520.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரையில்,கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது,அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு, பட்ஜெட் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.