அரசு பள்ளி கணினி ஆய்வகம் நிலை என்ன? அறிக்கை அளிக்க உத்தரவு
தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் அரசு பள்ளிகளில் உள்ள உயர்ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read Also This: கணினி ஆசிரியர்கள் நியமிக்க கோரி மத்திய கல்வி அமைச்சகத்திடம் மனு
தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்தும், உயர்கல்விக்கு செல்லும்போது நுழைவு தேர்வு, போட்டி தேர்வு, அலுவலக பணிகள் கணினி சாா்ந்தவையாகவே இருக்கிறது. இதனால் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்டம் வாரியம் அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் (ஹைடெக் லேப்) கடந்த 2019 ஆண்டு அமைக்கப்பட்டது.
உயர்நிலை பள்ளிகளில் 10 கணினியும், மேல்நிலை பள்ளிகளில் 20 கணினி அமைக்கப்பட்டு, இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கற்பிக்கப்படுகிறது. கணினி இயக்குவது, பாடம் சார்ந்த தகவல் பெறுவது, ஆசிரியர் மாணவ- மாணவிகளின் வருகை பதிவேடு விவரங்கள், அனைத்து தேர்வுகள், தொடர்பான விவரங்களை உடன் பதிவேற்றம் செய்வது, நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அரசு பள்ளி கணினி ஆய்வகம்
இந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகங்கள் சரியாக செயல்படவில்லை என்ற புகார் கல்வித்துறைக்கு சென்றது. இதனால் மாவட்டத்தில் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகங்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் சேகாிக்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வி ஆணையரக இணை இயக்குனர் (தொழிற்கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் 6,029 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இண்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் பல பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப சரியாக செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்ப பணியாளர்களிடம் தகவல் தெரிவித்தபோதும் குறைகள், உரிய காலத்திற்குள் சரி செய்யப்படவில்லை என சில முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.
எனவே குறைகளை சரி செய்திடும் வகையில், அனைத்து மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள 6,029 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் தற்போதைய நிலை குறித்து விவரங்களை படிவங்களின் பூர்த்தி செய்து ஆணையரக மின்னஞ்சல் முகவரிக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் கையொப்பமிடப்பட்ட கடிதத்தினை அனுப்பி வைக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.