திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மனைவி ஸ்ரீபதி (22). இவர் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய பணியாளர் தோ்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் கலந்துகொண்டு, வெற்றி பெற்றுள்ளார்.
விரைவில் 6 மாத பயிற்சிக்கு செல்ல உள்ளார். தேர்வில் வெற்றிபெற்று சொந்த ஊர் திரும்பிய ஸ்ரீபதிக்கு அந்த கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மலர் மாலை அணிவித்து, மேள வாத்தியங்கள் முழங்க பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மலைவாழ் மக்கள் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவருக்கு வழிநெடுகிலும் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். பாதை வசதி கூட இல்லாத மலை கிராமத்தில் படித்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீபதி ஜவ்வாது மலையிலிருந்து நீதிபதியாக செல்லும் முதல் பெண் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.