திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கும், மாணவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் என மொத்தம் 153 பேருக்கு கடந்த 30ம் தேதி சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 47 வயதான ஒரு ஆசிரியைக்கும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோன்று, நாகர்கோவில் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும், ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து, சனிக்கிழமை வேறு இரு ஆசிரியைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, அருமனை அருகே உள்ள பள்ளி ஒன்றில் கேரளாவில் இருந்து பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தக்கலை மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சில ஆசிரியர்களுக்கு வெப்பநிலையில் மாறுபாடு கண்டறியப்பட்டதால், அவர்களை வகுப்புக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். அவர்கள் பாடம் நடத்திய வகுப்புகளின் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், பள்ளி கல்வித்துறை இந்த விஷயத்தை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு 28 ஆயிரம் பேர் பதிவு செய்தாலும், 5,840 மாணவ, மாணவிகள் மட்டுமே நீட் பயிற்சி பெற்று வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கோபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சென்னையில் 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜாக்டோ – ஜியோ அறிவித்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக திடீரென தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி இலவச இண்டர்நெட் டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதில் 9,69,047 மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பொது நூலகத்துறையின் கீழ் பணிபுரியம் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 23 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வயலூர் செல்வமுருகன் மான்ய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றப்பட்டதை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நடுநிலைப்பள்ளியில் 265 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர், ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தலைமை ஆசிரியையாக இருந்த வாசுகி கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சில மாதங்களாக நிர்வாகத்திற்கும், தலைைம ஆசிரியையக்கும் நிர்வாக மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், தலைமை ஆசிரியை மாற்றப்பட்டு, புதிய தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இதனை கண்டித்து போராட்டம் நடந்தது, மீண்டும் வாசுகி அதே பள்ளியில் நியமிக்கப்படுவார் என கல்வி அதிகாரிகள் உறுதியளித்தன் பேரில், 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி அரசு உயர்நிலை பள்ளி புதிய கட்டிடம் திறக்கும் முன் இணைப்பு சாலை அமைத்து மழைநீர் தேங்காமல், இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக ஆட்சியின்போது, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தர்மபுரியில் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமால் போகும் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து, மறுவாழ்வு அமைக்கும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட காவல்துறை, மாவட்ட தொழிலாளர் நலத்துறை மற்றும் சைல்டுலைன் ஆகியோர் மேற்பார்வையில் ஆப்ரேஷன் ஸ்மைல் குழு என்ற தணிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது.