செய்திக்குழு : பதிவு நேரம்- 8:20am
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்வி தொலைக்காட்சியில் நீட் தொடர்பான பாடங்கள் விரைவில் ஒளிபரப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, கல்வி தொலைக்காட்சி சார்பில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகையில் அனைத்து பாடங்களும் காணொளி வடிவில் தயாரித்து தற்போது கல்வி தொலைக்காட்சியிலும், அதன் அதிகாரப்பூர்வமான Youtube சேனல்களிலும் தொடர்ச்சியாக ஒளிபரப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நீட் தேர்வு பாடங்கள் குறித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஊரடங்கு காரணமாக அரசின் நீட் தேர்வு மையங்களும் மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் நீட் பயிற்சி பெற முடியாத சூழ்நிலை உருவானது. இதனையடுத்து, கல்வி தொலைக்காட்சி அதிகாரிகள் ஆசிரியர்கள் மூலம் நீட் தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளன, இந்த பணி விரைவில் முடிய உள்ளன. மேலும் நீட் தொடர்பான நிகழ்ச்சிகள் மே 20ம் தேதி முதல் ஒளிபரப்ப கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் நீட் தேர்வுக்கு அவர்கள் தயார்படுத்தி கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.