Tamil Nadu Children Education Policy 2021 | தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கைகள்
Tamil Nadu Children Education Policy 2021
2021ஆம் ஆண்டுக்கான தற்போதைய கொள்கையின்படி, தமிழ்நாடு அரசு தன் மாநிலத்தின் குழந்தைகளுக்கான தனது கடமையைத் தெளிவுபடுத்துகிறது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் அவர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சூழலைப் பெற்றிருப்பதை உறுதி செய்கிறது, அவர்களின் உரிமைகள் அவர்களின் குழந்தைப் பருவம் முழுவதும் தொடர உத்தரவாதம் அளிக்கிறது.
இந்த அடிப்படையில், தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை குழந்தைகள் தொடர்பான அனைத்து சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அதில் பங்கேற்போருக்கு வழிகாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். மாநிலத் திட்டத்தில் குழந்தைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கை தேவை என்பதை இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு துறையிலும் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் முன்முயற்சிகளும் இந்தக் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் இந்தக் கொள்கையின் நோக்கம் ஆகியவற்றை மதிப்பதாகவும் உயர்த்திப் பிடிப்பதாகவும் உள்ளது.
Read Also: குழந்தைகள் அடிப்படை உரிமைகள்
தமிழ்நாடு மாநில குழந்தைகள் கொள்கை - 2021 ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்குவதன் மூலம் செயல்படுத்தப்படும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம், அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் / எந்த வகைப்பட்ட வன்முறையானாலும் குழந்தைகளை, குறிப்பாக எளிதில் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
1. தற்போதுள்ள நடைமுறையைப் பலப்படுத்தல்.
2. இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க ஒரு முறையான வழிமுறையை உருவாக்குதல்.
3. சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை உருவாக்குதல்.
4. இந்தக் கொள்கையோடு தொடர்புடைய அனைத்துப் பங்கேற்பாளர்கள் மற்றும் குழந்தைகளிடையே இந்தக் கொள்கை குறித்தும் தமிழ்நாடு அரசு குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது என்பதுகுறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்..
5. மாநிலத்தில் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது. அதன் மூலம் அனைத்துக் குழந்தைகள், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படும் சமூகத்தில் இருந்து வரும் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியும்.
6. மாநிலத்தின் அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்த தொழில்நுட்ப முன்னேற்றத்தை உகந்த அளவில் பயன்படுத்துதல்.
குழந்தைப் பங்கேற்பை ஊக்குவிக்கும் அதேவேளையில் பொது முடிவுகள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் கலந்தாய்வுகள் அடிப்படையில் செயல்திட்டம் உருவாக்கப்படும். இந்தச் செயல்திட்டமானது, பல்துறை ஒருங்கிணைப்பு மற்றும் சிறப்பான பலன்களைத் தரும் விதத்தில் அமையும். கொள்கையை செயல்படுத்துவதற்கும் மேலும் கண்காணிப்பதற்கும் மாநில அளவில் பிரத்தியேகமான பல்துறை ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
மேலும், குழந்தைகளின் வளர்ந்து வரும் தேவைகள், விளைவுகள் குறித்த மதிப்பீடு, இந்தக் கொள்கையின் வரம்பிற்குள் வரும் பல்வேறு அம்சங்களின் அளவீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் போதுமான நிதி ஆதாரத்தை ஒதுக்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒரு குழந்தை வரவு-செலவுத் திட்டத்தை ஆய்வு செய்யும்.
ஆதாரங்களின் அடிப்படையிலான மதிப்பீடு, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் அளவீடுகள் ஆகியவற்றின் மூலம் இந்தக் காலகட்டத்தில் கிடைத்த விளைவுகள் / தாக்கத்தை மதிப்பாய்வு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கொள்கை திருத்தப்படும்.
திட்டமிட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பதால் அனைத்து மட்டங்களிலும் முறையான ஒருங்கிணைப்பை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கொள்கைச் சுருக்கத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகள், மாற்றத்துக்குட்பட்ட வழிமுறைகள் / உத்திகள் மற்றும் செயல்படுத்துவோர், குழந்தைகளுக்கான நிலைத்து நிற்கும் முடிவுகளை வழங்க உதவுவார்கள். இவையன்றி எந்தக் குழந்தையும் தனியாக விடப்படவில்லை என்கிற அரசியலமைப்புச் சட்ட செயல்திட்டத்தின் இலக்கை தமிழ்நாடு அரசு விரைவில் நனவாக்கும்.