தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இளங்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு தொழில்நுட்பவியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளும் வழங்கப்படுகிறது. இக்கல்லூரியில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். இதில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியராகவும், இணை பேராசிரியர்கள், பேராசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது, கொரோனா பரவல் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பணிகள் மாநிலம் முழுவதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பதசி உயர்வு கலந்தாய்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்று நடந்தது. இதில் ஆழியார், பவானிசாகர், உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர், இன்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. பின்னர், இவர்களுக்கு வரும் மே 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. பல்கலைக்கழகம் தேர்தல் நடத்தை மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்தி வருவதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற அச்சத்தில் அவசர அவசரமாக கலந்தாய்வு நடத்துவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கூறும்போது, சான்றிதழ் சாிபார்ப்பு பணி நடந்தது உண்மைதான். அடுத்து நேர்காணல் நடக்கவுள்ளது. இதற்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் எவ்வித விதிமீறல் நடக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்தான் இது நடந்துள்ளது, என அவா் தெரிவித்துள்ளார்.