சென்னை: தமிழக அரசு தனித்தேர்வர்களுக்கும் 12ம் வகுப்பு தேர்வு உள்ளதா அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால், தமிழக அரசு, மாணவர்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்துள்ளது. தற்போது, கல்வியாளர்கள் தலைமையில் பிளஸ் 2 மதிப்பெண் எவ்வாறு வழங்குவது குறித்து குழு அமைத்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொது தேர்வு எழுத, தமிழ்நாடு முழுவதும் சுமார் 60,000 பேர் தோ்வு எழுத, கட்டணம் செலுத்தி தேர்வுத்துறை மூலம் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இவர்களுக்கு பொதுத்துதேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற அறிவிப்பு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை தற்போது வரை தெளிவுப்படுத்தவில்லை.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, தனித்தேர்வர்கள் என்றால் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மட்டும் அல்ல, பொதுத்தேர்வின் போது, மருத்துவம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு சில தேர்வுகள் அவர்கள் எழுதியிருக்க முடியாது. அதுபோன்ற பள்ளி மாணவர்களும், தனித்தேர்வா்கள் கீழ் வருவார்கள்.
மேலும், வேலைக்கு சென்று கொண்டே, தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கட்டணம் செலுத்தி, பல பேர் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக, இவர்கள் தங்களது குடும்பத்தையும் கவனித்துகொண்டு, வேலை செய்தும் தங்களது படிப்பை தொடர்கின்றனர்.
தனித்தேர்வா்களுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மறு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல் பேர், பல்வேறு பாடப்பிரிவுகள் தோல்வி அடைந்தனர். தற்போது 2021 ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வும் நடத்தப்படாததால், அவர்கள் எவ்வாறு தங்களது உயர் கல்விக்கு செல்ல முடியும் என்ற கேள்வி அனைத்து தனித்தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. தற்போது, தனித்தேர்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், தேர்வு அலுவலகங்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தேர்வு குறித்து ஐயப்பாடுகளை கேட்டறிந்து வருகின்றனர். உடனடியாக பள்ளி கல்வி அமைச்சர், தனித்தேர்வர்கள் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்னவென்று விரைவாக தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர். இவ்வாறு, அந்த ஆசிரியர் கூறினார்.
ஏற்கனவே முந்தைய ஆட்சியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்துள்ள நிலையில், தனித்தேர்வர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாத பரிதாபமான சூழ்நிலை உருவாகியுள்ளது.