குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவர்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநருமான இரா.மனோன்மணி வலியுறுத்தினார்.
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய கலைச்சொல் உருவாக்கக் கூட்டத்தில் அவர் பேசியது:எதிர்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது. மழலைக் கல்வி தொடங்கும் போதே, அவர்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என்றார், அவர். கூட்டத்தில் பங்கேற்ற உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைத்துறையினர், பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கி இணையத்தின்வழியாக மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டத்துக்கு தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வழங்குவோம் என்றனர்.மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் கலைச் சொல்லாக்கப் புலனக்குழுவை தொடங்கி, அதில் தங்களை இணைத்தால், அதன்வழியே நாள்தோறும் துறைசார்ந்த புதிய கலைச்சொற்களை உருவாக்கிப் பகிர்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.கூட்டத்துக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணை இயக்குநர் ப.கலைவாணி தலைமை வகித்தார். உதவி ஆணையர் எஸ்.சாந்தா மற்றும் கண்காணிப்பாளர் செ.ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.