கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது. குறிப்பாக, கிராமப்புறத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களிடம் ஆன்ட்ராய்டு செல்போன், இணைய வசதி என்பது பெருமளவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இதனை சமாளிக்கும் வகையில்தான், பள்ளி கல்வித்துறை, மாணவர்களை கல்வி தொலைக்காட்சி பார்க்க அறிவுறுத்துமாறு ஆசிரியர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அவர்களை போனில் தொடர்பு கொண்டு மாணவா்களின் கல்வியினை கண்காணிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நடைமுறைதான் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. இதற்கிடையில் கோவை சூலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு நேரடியாக ஆன்லைன் வகுப்பு எடுக்க வேண்டும், வகுப்பு எடுக்கவிட்டால் ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் எனக்கூறியது அந்த பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுதொடர்பாக, அவர் வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும், இந்த தகவல் யாருக்கும் அனுப்பக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது, இந்த படம் வாட்ஸப்பில் பரவி வருகிறது. ஆசிரியர் ஒருவர் கூறும்போது, தலைமை ஆசிரியர் அவர்கள் எப்படியாவது மாணவர்களுக்கு கல்வி சென்று சேருவதை உறுத்திப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அவரது எண்ணம் நியாமானது. ஆனால், அதேச சமயத்தில் கள எதார்த்தம் புரியமால், ஆன்லைன் பாடம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். பல மாணவர்களிடம் போன் இருந்தால், இண்டர்நெட் வசதி இல்லை, சில மாணவர்களிடம் ஆன்ட்ராய்டு போன் இல்லை. இந்த ஆன்லைன் வகுப்பை எப்படி நேர்த்தியாக கொண்டு போக முடியும். இந்த விவரத்தை கூறினால், அவர் ஏற்க மறுக்கிறார். இல்லையென்றால், தற்செயல் விடுப்பு அளிக்கப்படும் என்று மிரட்டுகிறார். இதற்காக, கால அட்டவணையும் தயார் செய்துள்ளார். மேலும், சில சமயங்களில் வீட்டிற்கு சென்றே பாடம் எடுக்க சொல்கிறார். நாங்கள், தொடர்ந்து அரசு கூறியது போல், நாங்கள் மாணவர்களின் கல்வியை உறுதி செய்து வருகிறோம். தலைமை ஆசிரியர் நடவடிக்கை எங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது, கல்வி உயரதிகாரிகள்தான் இதற்கு தீர்வு காண வேண்டும் என புலம்பினார்.