கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியரை கண்டித்தும், நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருேக உள்ள என்ஐடி கல்லூரியில் உள்ள மகளிர் விடுதிக்கு வேலைக்காக ஒப்பந்த ஊழியர் ஒருவர் நேற்று சென்றார். அப்போது விடுதியில் படித்து கொண்டிருந்த மாணவியிடம் அந்த ஊழியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த மாணவி விடுதி காப்பாளரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த தகவல் மாணவ, மாணவிகள் மத்தியில் பரவவே, வளாகத்தில் ஒன்றுகூடி போராட்டம் நடத்த தொடங்கினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புகார் அடிப்படையில் அந்த ஊழியரை கைது செய்தனர். மேலும், நிர்வாக அலட்சிய போக்கை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் கல்லூரி நிர்வாக இயக்குனர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கல்லூரியில் விடிய விடிய பரபரப்பு நிலவியது.