கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற தலைமை செயலாளர் உத்தரவு கல்வித்துறையில் அமலில் உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்ப நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது எந்த உத்தரவை பின்பற்றுவது என அதிகாரிகள், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கோடை விடுமுறை, வெப்ப அலை காரணமாக மாணவா்கள் நலன் கருதி அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை அலைகழிக்கக்கூடாது. சிறப்பு வகுப்புகள் நடக்கவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தியதை அடுத்து, புகாரின் அடிப்படையில் தனியார் பள்ளி இயக்குனர் முத்துபழனிசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,முந்தைய நாளில் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அதிகாரி ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்த உத்தரவில், தொடர்ந்து கற்போம் என்ற தமிழக அரசின் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களை அழைத்து திங்கள் முதல் வெள்ளி சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். சனி அன்று தேர்வு நடத்த வேண்டும், இதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால் எந்த உத்தரவை பின்பற்றுவது என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.