Sivaganga district latest news | பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்
Sivaganga district latest news
சிவகங்கை அருகே விமலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். அதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து அவர் உடனடியாக ஆகஸ்டு மாதம் மறுதேர்வு எழுதினார். கணிதம், சமூக அறிவியல் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெற்றார்.
அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்ணும், எழுத்துத்தேர்வில் 15 மதிப்பெண்ணும் என 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். எழுத்தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை.
ஆனால், அந்த மாணவன் அறிவியல் பாடத்தில் மொத்த மதிப்பெண் 40 பெற்றதால், தான் தேர்ச்சி அடைந்ததாக எண்ணி பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தார். அப்போது ஆசிரியர்களும் சரியாக சான்றிதழை சரிபார்க்காமல், கவனக்குறைவாக மாணவனுக்கு பள்ளியில் சேர்க்கை நடத்தினர்.
அந்த மாணவன் தற்போது பிளஸ் 1 தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 படித்து வந்தார். சில மாதங்களில் பொதுத்தேர்வு வர இருக்கும் நிலையில், அதற்காக அவரது சான்றிதழ்கள் பள்ளிகள் மூலமாக சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. சான்றிதழ் ஆய்வு செய்யும்போது, அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இருப்பது தொியவந்தது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த மாணவனிடம் பிளஸ்2 தேர்வு எழுத முடியாது எனவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகுதான் பிளஸ் 2 தேர்வு எழுத முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவனின் பெற்றோர் வரவழைத்து, எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கியபின், மாணவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டனர். இதுதொர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் அஜாக்கிரதையால், மாணவனின் இரண்டு வருட படிப்பு வீணானது.