இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வுக்கான விடைகுறிப்பு மற்றும் தேர்வு முடிவுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆறு மாதம் கடந்தும் வெளியிடாததால் தேர்வர்கள் கடும் அதிருப்தி உள்ளனர்.
கடந்தாண்டு டிஆர்பி மூலம் தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கேற்க முடியும் என விதி வகுக்கப்பட்டது. Read Also: டிஆர்பி முகவரி அதன்படி கடந்த ஜூலை 21ம் தேதி தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை டிஆர்பி தரப்பில் இருந்து தேர்வுக்கான விடைக்குறிப்புகள் அதன் இணையதளத்தில் வெளியிடவில்லை என தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பொதுவாக விடைக்குறிப்புகள் தேர்வு முடிந்து இரண்டு வாரங்களுக்குள் டிஆர்பி விடைகுறிப்புகள் வெளியிடுவது வழக்கம் எனக்கூறிய தேர்வர்கள், இப்போது அதிகாரிகள் அலட்சியத்தால், விடைக்குறிப்புகள் வெளியிடவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை டிஆர்பி வெளியிட மறுத்துவருகிறது. ஏற்கனவே, பல ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் தேர்வர்கள் ஆசிரியர் பணி கிடைக்குமா, கிடைக்காதா என்ற விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில், இந்த செய்தி ஆங்கில நாளிதழில் இன்று வெளியான நிலையில், டிஆர்பி தலைவர் வெங்கடபிரியா தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார். இதனால், தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தின் இந்த கோளாறுதனத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், தேர்வர்கள் வாழ்க்கையில் தமிழ்நாடு அரசு சதுரங்க விளையாட்டு விளையாடுவதாக தேர்வர்கள் புலம்புகின்றனர்.