இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், படுகாயத்துடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே லட்சுமிநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர்களால் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அதுகுறித்து விளக்கம் பெற இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் நேற்று மாலை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து பேசிவிட்டு பேருந்தில் திரும்பியுள்ளனர். அப்போது ஒரு கட்சியை சேர்ந்த குட்டி, ரமேஷ், ராமசாமி ஆகிய மூவர் பேருந்தை வழிமறித்து, இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை கீழே இறக்கி மத மற்றும் சாதிய மோதலை ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரங்கசாமி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.