SEAS Tamil Nadu 2023 | சேலம் கல்வித்துறையில் முறைகேடா?
SEAS Tamil Nadu 2023
நவம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு, மாநிலத்தில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உதவியுடன் பள்ளிகளில் 3, 6, 9 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்இஏஎஸ் எனப்படும் மாநில கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.
இத்தேர்வு நடத்த ஆசிரியர்களுக்கு பதிலாக, பிஎட் மற்றும் எம்எட் கல்லூரி மாணவர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்வு நடத்துவதற்கு, இந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் முன் பயிற்சி வழங்கப்பட்டது.
இத்தேர்வில் கள ஆய்வாளர்களாக பணியாற்றுவதற்கு மாணவர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.900 ஒதுக்கப்பட்டது. அதாவது ஒரு நாள் பயிற்சிக்கு ரூ.300 மற்றும் இரண்டு நாட்கள் பணியாற்ற நாள் ஒன்றுக்கு தலா ரூ300 என ரூ 600 ஒதுக்கப்பட்டது. இதுதவிர, போக்குவரத்துப்படி ரூ.150 என ஒதுக்கப்பட்டது. தேர்வு முடிந்தவுடன், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்களுக்கு மதிப்பூதியம் ரூ 900 வழங்கப்பட்டது. போக்குவரத்துப்படி மட்டும், ஒவ்வொரு மாவட்டத்தில் வெவ்வேறு விதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், சேலம் மாவட்டத்தில் மதிப்பூதியம் வழங்குவதில் குளறுபடி நடந்துள்ளது. அதாவது, ரூ, 900 பதிலாக மாணவர்களுக்கு ரூ.600 மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர, பெரும்பாலான மாணவர்களுக்கு போக்குவரத்துப்படி முற்றிலுமாக வழங்கவில்லை என்ற தகவல் வௌியாகி உள்ளது. அதிகாரிகளுக்கு எதிராக அதிருப்தி அடைந்த மாணவர்கள் தங்களுக்கான முழு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என சிலர் முதன்மை கல்வி அலுவலர் கபீரிடம் புகார் கடிதம் வழங்கியுள்ளனர். சில மாணவர்களுக்கு மட்டும் முழு மதிப்பூதியம் வழங்கப்பட்டது, சில மாணவர்களுக்கு மதிப்பூதியம் வழங்காமல், நிதியை ஸ்வாக செய்துள்ளதாக பகீர் புகார் கிளம்பியுள்ளது.
சேலம் மாவட்ட கல்வித்துறை மற்றும் சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இவ்விகாரத்தில் அமைதியாக இருப்பது, மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களுக்கான மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.