குழந்தைகள் தினவிழா முன்னிட்டு, தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் அமெரிக்கன் இந்திய பவுண்டேஷன் டிஜிட்டல் ஈக்வாலிஸர் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு போட்டி நடத்தி ஊக்கப்படுத்த திட்டமிட்டது.
இந்த போட்டியின் நோக்கம் கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களே ஊக்கப்படுத்துவது மற்றும் அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவை ஆகும். அதன்படி போட்டியில் இரண்டு தலைப்புகள் வழங்கப்பட்டது. முதலாவதாக, 2050ம் ஆண்டு இந்த உலகம் எப்படி இருக்கும் மற்றும் அடுத்ததாக, நீங்கள் பிரதமராக இருந்தால், இந்த கொரோனா தொற்று சூழ்நிலையை எப்படி கையாள்வீர்கள். இந்த போட்டியில், ஐந்து மாவட்டங்களில் இருந்து 435 மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை வீடியோ, பவர்பாயிண்ட் பிரசன்டேஷன், போஸ்டர்ஸ், பாட்டு மற்றும் கடிதம் வாயிலாக சமர்ப்பித்தனர். இதில் மூன்று சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. வீடியோ தயாரித்தலில், காரம்பாக்கம் அரசு பள்ளி மாணவன் அபிேஷக், எழுத்து போட்டியில், அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி தன்யா ஸ்ரீ, போஸ்டர் மேக்கிங் போட்டியில் கேளம்பாக்கம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி 9ம் மாணவி துர்காதேவி ஆகியோர் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வகுப்பு வாரியாக பாடதொகுப்பு அடங்கிய ‘டேப்லெட்’கள் மற்றும் சான்றிதழ்களை வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த 18ம் தேதி தனது அலுவலகத்தில் வழங்கி சிறப்பித்து, வாழ்த்து தொிவித்தார்.