தடுப்பூசி முகாம் பணியில் இருந்து பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துசாமி, பள்ளி கல்வி அமைச்சர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவா்கள் பள்ளிகளுக்கு வருகின்ற நிலைமை தமிழக அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி மாணவர்கள் இன்றி ஆசிரியர்களுடன் செயல்பட்ட பொழுது தமிழ்நாடு அரசின் கோவிட் /19 தொற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்போது தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி வேலை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளிலும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் கோவிட் - 19 தடுப்பூசி முகாமில் பணியாற்ற செல்வதால் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து வாரத்தின் ஏழு நாட்களும் பணியாற்றிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஓய்வு இல்லாமல் வாரத்தின் ஏழு நாட்களும் ஆசிரியர்கள் பணிகள் செய்வதன் காரணமாக மன உளைச்சல் மற்றும் உடல் சோர்வின் காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தலில் முழுமையாக ஈடுபடாத சூழ்நிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள கோவிட் 19 தடுப்பூசி முகாம்களுக்கு நடுநிலை பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்வதில் விலக்கு அளிக்க வேண்டும். ஞாயிறன்று ஆசிரியர்கள் வீட்டில் இருந்தால் மட்டுமே தங்கள் குடும்ப வேலைகளையும், கற்பித்தலுக்கான தயாரிப்பு பணிகள் செய்ய இயலும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.