முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
அனைத்து தனியார் பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் முதலமைச்சர் தனிப்பிாிவுக்கு புகார் கடந்த நவம்பர் மாதம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், கோவையில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பணியாற்றிய கீதா பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்க தனியார் பள்ளிகளிடம் பணம் பெற்றதாகவும், பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உதவிபெறும் பள்ளிகளில் நடந்த ஆசிரியா் பணி நியமனத்தில் பணம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவா் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது எஸ்சிஆர்டிஇயில் துணை இயக்குனராக உள்ள கீதாவை விசாரிக்க, பள்ளி கல்வித்துறை விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.