கொரோனா இரண்டாம் அலை காரணமாக, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளி கல்வி அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதவியேற்றபின், பள்ளி கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பொது தேர்வு நடத்துவது குறித்து சமீபத்தில் ஆலோசனை செய்தார்.
அப்போது, தேர்வுக்கான நாட்கள் இடைவெளி காரணமாக, 12ம் வகுப்பு மாணவர்கள் கற்றதும் மறந்துவிடுவார்கள், அவர்களை தொடர்ந்து கல்வி செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும் என அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயராகும் வகையில், ஞாயிறு நீங்கலாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்: திருப்புதல் தேர்வு மே 19ம் தேதி முதல் ஜுன் 2ம் தேதி வரை நடத்த வேண்டும். அனைத்து பாடங்களுக்கான தேர்வுகள் முழுப்பாடத்தினை அடிப்படையாக கொண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும். திருப்புதல் தேர்வுக்கான நேரம் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். திருப்புதல் தேர்வுக்கான மதிப்பெண் 100/75 ஒவ்வொரு திருப்புதல் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் தேர்வு நடைபெறும் நாளான்று இவ்வலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல்/ வாட்ஸப் மூலமாக காலை 8.45 மணி முதல் 9 மணிக்குள் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். தலைமையாசிரியர் தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்வில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்வில் கலந்துகொள்ளமால் எவரேனும் விடுபடக்கூடாது. தலைமையாசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் இதனை கண்காணிக்க வேண்டும். தேர்வு நடைபெற வேண்டிய வழிமுறைகள் ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் உள்ளடங்கிய தனி வாட்ஸப் குழுக்கள் உருவாக்க வேண்டும். தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு பாட ஆசிரியர்கள் தேர்விற்கான வினாத்தாளினை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு வாட்ஸ்ப் மூலம் அனுப்ப வேண்டும். மாணவர்கள்/மடிக்கணினிகள்/ கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தனித்தாளில் விடைகளை எழுத வேண்டும். விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர், பதிவு எண் (அரசு தே்ாவுத்துறையால் வழங்கப்பட்ட எண் ) பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள் மாணவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும். எழுதப்பட்ட விடைத்தாள்களை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மாணவர்கள் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் தங்களது அனைத்து விடைத்தாள்களையும் பாட வாரியாக அடுக்கி பள்ளியில் நேரிடையாக வருகைபுரிந்தோ/பெற்றோர் மூலமாகவோ/ அவ் ஊரிலுள்ள ஏதேனும் ஓரு மாணவர்கள் மூலமாகவோ பள்ளியில் ஒப்படைக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் அதனை பெற்று, இவ்விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.