School education department court direction | தலைமை ஆசிரியர்களின் பணி கல்வி கற்பிப்பதா மடிக்கணினியை பாதுகாப்பதா
School education department court direction
தலைமை ஆசிரியர்களின் பணி கல்வி கற்பிப்பதா, மடிக்கணினியை பாதுகாப்பதா என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சசிகலா ராணி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் தாக்கல் செய்த மனு - நாங்கள் இருவரும் தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியைகளாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள். எங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள், ஒய்வூதியத்தை சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசால் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் திருடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், எங்களுடைய பணப் பலன்கள், ஒய்வூதியத்தை நிறுத்திவைத்ததாக கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இலவச மடிக்கணினிகள் திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எனவே, மாவட்ட கல்வி அலுவலர்களின் உத்தரவை ரத்து செய்து எங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக, வழக்கில், கடந்த 2016ஆம் ஆண்டில் 28 மடிக்கணினிகளை போலீசார் பறிமுதல் செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவு – - எங்கு, எப்போது யாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறித்த முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும். மடிக்கணினிகள் வைக்கப்பட்ட அறைக்கு ஏன் பாதுகாவலரை நியமிக்கவில்லை. தலைமை ஆசிரியர்கள் பணி கல்வி கற்பிப்பதா, மடிக்கணினிகளை பாதுகாப்பதா, எதன் அடிப்படையில் தலைமை ஆசிரியைகளின் பணப்பலன்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மடிக்கணினிகள் திருட்டுக்கு தலைமை ஆசிரியர்கள்தான் பொறுப்பு என்பது எந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விரிவான விசாரணைக்காக அரசின் எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர், தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்களை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும். வழக்கு விசாரணை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது,
என்றார் நீதிபதி.