பத்தாம் வகுப்பு தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளி கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 5 பாடங்கள் என்ற அடிப்படையில் பொதுத் தேர்வு 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு சிறுபான்மை மொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் (அதாவது மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட), தமிழ் பாடம் கற்காமலேயே உயர் கல்வி செல்வதாக கருதி, அப்பிரிவு மாணவர்களுக்கு தமிழ்பாடத்தை அரசாணை மூலம் கட்டாயமாக்கியது. பின்னர், சிறுபான்மை பிரிவு மாணவர்கள் தரப்பில் தங்கள் மொழி பாடங்களை தேர்வாக எழுத வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர். இதையடுத்து தமிழக அரசு சிறுபான்மை பிரிவு மாணவா்கள் தங்கள் மொழி பாடங்களை விருப்பப் பாடமாக தோ்வில் எழுதிக் கொள்ளலாம் எனவும், விருப்பப் பாடங்கள் தோ்ச்சி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்தது. சிறுபான்மை பிரிவினர் தங்கள் மொழிப்பாடங்களுக்கு பொதுத்தேர்வில் அங்கீகாரம் அளிக்க வேண்டும், தேர்ச்சிக்குரிய மதிப்பெண் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற தீர்ப்பில் விருப்ப பாடத்தையும் தேர்ச்சி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை பின்பற்றி பள்ளி கல்வித்துறை செயலர் இதற்கான அரசாைணயை வெளியிட்டார். அதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என்றும், சிறுபான்மை பிரிவு மாணவர்கள் தங்கள் விருப்பப்பாடத்துடன் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுபான்மை மொழி அல்லாத பிற மாணவர்கள் அதாவது தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு எவ்வித மாற்றமின்றி, வழக்கம்போல் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.,