School Education Commissioner Nandakumar | பள்ளி கல்வி ஆணையர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், வா.அண்ணாமலை முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, அரசு விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிர்வாகக் கட்டுக்கோப்பை பாதுகாத்திட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொடியேற்ற வேண்டும் என்று பொது அரசாணை வெளியிடப்பட்டுள்ளார்.
Also Read: கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமன உத்தரவு நிறுத்தி வைப்பு
School Education Commissioner Nandakumar
ஆனால், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கிய வாய்மொழி உத்தரவில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியினை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்தான் ஏற்றவேண்டும் என்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அந்த பொறுப்பும், கடமையும் உள்ளது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை ஏற்று, முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளிகளில் தலைமையாசிரியர்களே தேசியக்கொடியினை ஏற்ற வேண்டும் என்று குறுஞ்செய்தி வாயிலாக சுற்றறிக்கையினை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ளார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவை மீறி ஒரு பள்ளிக்கல்வி ஆணையர் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடும் இந்நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை முற்றிலும் புறக்கணித்து விட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொடியேற்ற செய்வது என்பது, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இடையே பெரும் கலவரத்தையும், கசப்புணர்வையும் உருவாக்குகிற செயலாகவே நாங்கள் கருதினோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் ஒத்துழைப்பு இல்லாமல் நம்மால் கிராமப்புறங்களில் பள்ளிகளைச் சுமூகமாக நடத்திச் செல்வது என்பது சாதாரணமான செயல் அல்ல; தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுடைய உத்தரவுப்படி அனைத்து பள்ளிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் வரத்தான் செய்வார்கள். தலைமை ஆசிரியர்களை கொடியேற்ற சொல்லித்தான் எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது என்று தலைமையாசிரியர்கள் அவர்களிடம் தெரிவித்தால் மக்கள் பிரதிநிதிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் இடையே கலவர சூழல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
இதை தடுத்து நிறுத்துவதற்காக எங்களைப் போன்ற மூத்த சங்கத் தலைவர்கள் அனைத்து நிலை தலைமை ஆசிரியர்களுக்கும் உரிமை உறவு வேண்டுகோளாக புலனம் வழியாக பதிவிட்டு இருந்தோம். அந்த பதிவில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நாம் பள்ளிகளை நடத்த முடியாது. சுதந்திர தினத்தன்று வருகின்ற மக்கள் பிரதிநிதிகளை, பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று மகிழ்ச்சியுடன் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தில் பங்கு பெறச் செய்வது பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்று பதிவிட்டு இருந்தோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று கொடியினை ஏற்றி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கோலாகலமாக அமுதப் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் கொடியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் கொடியேற்றி வைத்துள்ளார்கள். சுதந்திர தினத்திற்கு முதல் நாள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. அமிர்தம்மாள் அவர்களை சுதந்திர தின கொடியேற்றச் செய்து சமூக நீதியை நிலைநாட்டி உள்ளார்கள்.
பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார்
பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களின் நல்லெண்ண பொது ஆணைக்கு விரோதமாக செயல்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வி ஆணையராக பொறுப்பேற்றவுடன் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் நடைபெறக்கூடிய நல்லாட்சியின் மீது அன்றாடம் ஆசிரியர்களுக்கு வெறுப்புணர்வினை ஆட்சிக்கு எதிராக ஏற்படுத்தி வருகிறார். ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சரிடம் நேரடியாகவே இவர் தொடர்பான புகாரினை அளித்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வி ஆணையர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.