பாரதிய ஜனதா கட்சி, மாநில துணைத் தலைவர், நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (சர்வசிக்க்ஷா அபியான்) கணிணி பயிற்சி கூடங்கள் அமைக்கவும், கணினி ஆசிரியர்களை நியமிக்கவும் மத்திய அரசு நிதியளித்தது. ஆனால்,இன்று வரை பயிற்சி கூடங்களும் அமைக்கப்படவில்லை, கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. கணினி பாடமும் இல்லை, அதற்கான பாட வேலைகளும் இல்லை.கணினி அறிவியல் பாடத்தை அறிவியல் பாடத்துடன் மூன்று பக்கங்கள் மட்டும் இணைத்துவிட்டு அதனை கற்பிக்க, அறிவியல், கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது பள்ளி கல்வித்துறை. எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கு வந்த நிதியை மடைமாற்றம் செய்து Emis பணிக்கு செலவிட்டதோடு, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இருப்பதாகவே தற்போது வரை பணம் பெற்று வருகின்ற நிலையில், தற்போது மத்திய அரசின் கல்வித்துறை இணையதளத்தில் நடுநிலைப்பள்ளிகளில் இல்லாத கணினி சோதனை பயிற்சி கூடங்களை இருப்பதாகவும், நியமிக்கப்படாத ஆசிரியர்கள், நியமிக்கப்பட்டதாகவும் தவறான தகவல்களை அளிக்க வேண்டும் என பள்ளிகள் நிர்பந்தப்படுத்தப்படுகின்றன. 2021-2025 ஆம் ஆண்டு வரை கணினி பயிற்றுநர்கள் நியமனத்திற்காக, சோதனை கூடங்கள் அமைப்பதற்காக மொத்தம் 874 கோடி ரூபாயை மத்திய அரசு, தமிழக அரசுக்கு கணினி கல்விக்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்ப திட்ட (Samagra Siksha ICT) நிதியாக வழங்கியுள்ளது. ஆனால், எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிதி அளிக்கப்பட்டதோ அதற்காக செலவிடவில்லை. ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு கணிணி கல்வியை அளிக்க மறுத்ததோடு, அதற்காக மத்திய அரசு அளித்த நிதியை வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது. மாநில உரிமைகள் குறித்து பேசினால் மட்டும் போதாது, தன் கடமைகளையும் முறைகேடுகள் இல்லாமல் மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.