சென்னை, அக் 15 –
சேலம் மாவட்டத்தில் செயல்படும் அயோத்தியாப்பட்டணம் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் லிமெடட்டில் அதன் நிர்வாகிகள் லட்சகணக்கில் பண மோசடி செய்துள்ளதாக அதன் சங்க உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சிறுசேமிப்பு சந்தா தொகை மற்றும் கடன் தொகைக்காக மாதந்தோறும் திருப்பி செலுத்தப்படும் தொகை விவரங்களை ஆண்டு இறுதியில் அறிக்கையாக தனி நபர்களுக்கு வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடன் அல்லது சந்தா பிடிக்க கோரும் தொகைக்கும், அலுவலகத்தில் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகைக்கு வித்யாசங்கள் ஏற்பட்டால் உடனே சரி செய்வதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பல ஆசிரியர்களை சங்க அலுவலகம் அழைத்து அவர்கள் நிலுவை தொகை செலுத்த வேண்டிய இருப்பதாக வாய்மொழியாக கணக்கீடுகள் கூறி, அவர்களே செலுத்த சம்மதிப்பதாகவும் இல்லையெனில் மாத சந்தாவோடு சேர்த்து பிடிக்க அவர்களே ஒப்புதல் அளித்த மாதிரியும் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு பணபிடித்தம் செய்து வருகின்றனர் எனவும் மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பதிவேடு பராமரிப்பு பணியும் முற்றிலும் கிடையாது. முதலில் விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கடன் கொடுப்பதில்லை என்று அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், தகுதி இல்லாமல் கூட சிலருக்கு மட்டும் விதிகளை மீறி, உடனுக்குடன் கடன் வழங்கியிருக்கிறார்கள். மாதம் நடத்தப்படும் கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு இல்லை என தெரிவித்துள்ளனா்.
கடன் பெற்ற ஆசிரியர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டதில் 2019ம் ஆண்டுக்கான ரசீதுகள் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பதிவாளர் சுற்றறிக்கையின்படி, கடன் பெறுவோர் விருப்பத்திற்குட்பட்டு தேவைப்படுவோருக்கு மட்டும் காப்பீடு செய்ய வேண்டும். விருப்பமில்லாமல், பெறப்பட்ட காப்பீட்டு தொகையினை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறி கடன் தொகைக்கு பங்கு தொகை 5 சதவீதம் மட்டுமே வசூலிக்காமல், 10 சதவீதம் வரை வசூலிக்கின்றனர் என அவர்கள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற மேலும் பல புகார்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.