கடந்த மாதம் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் பள்ளியில் செயல்படும் இளைஞர் மற்றும் சூழல் மன்றங்கள் கீழ் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுச்சூழல், பல்லுயிர், காலநிலை மற்றும் சூழலியல், ஊட்டச்சத்து, ஆரோக்கியம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு எனது கனவு நூலகம், எனது கனவு பள்ளி என்ற தலைப்பில், குறுமைய அளவில் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டிக்கு பள்ளி அளவில் 5 பேர் தேர்வு செய்ய வேண்டும். இதில் தேர்வானவர்கள், குறுமைய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்களது கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூபாய் 7 ஆயிரம் மதிப்புள்ள டேப் வழங்கப்படும் எனவும், இரண்டாவது பரிசாக ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள ஆன்ட்ராய்டு மொபைல், மூன்றாவதாக ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் சார்ந்த கால்குலேட்டர் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முறையே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டிகளை நடத்த குறுவளமைய தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டனா். அதற்கான நிதியும் குறுமையத்திற்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, வழங்கப்பட்ட நிதியை என்ன செய்வதென்று தெரியாமல், மாா்ச் மாதத்தில் செலவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கட்டுரை போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த போட்டிகள் குறித்து பல மாணவர்களுக்கு உாிய தகவல் சென்றடையவில்லை. தலைமை ஆசிரியர்களை பள்ளியில் சில சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அவர்களை கட்டுரை போட்டியில் பங்கேற்கச் செய்து குறுமைய போட்டிக்கு அனுப்பினர். குறிப்பாக, இதில், குறுமைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு என ஒரு பரிசை ஒதுக்கிவிட்டனா். இது ஒருபுறம் இருக்க, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், ஒதுக்கப்பட்ட பரிசு தொகை, பொருட்களின் மதிப்புக்கு மேலாக உள்ளது. டேப்க்காக ரூ 7 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடைகளில் குறைந்தப்பட்சம் தரமான டேப் விலை ரூ.10 ஆயிரமாக உள்ளது. ரூ.7 ஆயிரத்திற்கு மேல் செல்போன் வாங்கினால்தான் பயனுள்ளதாக இருக்கும் என கடைக்காரர்கள் கூறுகிறார்கள். இதேபோல் கால்குலேட்டர் மதிப்பு ரூ.2 ஆயிரம் மேலாக உள்ளது. குறைவான விலையில், தரமற்ற பொருட்கள் வாங்கினால் நிச்சயம் ஆறு மாதத்திலேயே அதன் செயல்பாடுகள் குறைந்துவிடும் எனவும், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்காது என கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஒரு சில பள்ளி தலைைம ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை ஒதுக்கி, பரிசு பொருட்களை மாணவர்களுக்கு வாங்கி கொடுத்துள்ளனர். சில தலைமை ஆசிரியர்கள், வெற்றிபெற்ற மாணவா்களிடம் கூடுதல் பணத்தை பெற்று, பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். இன்னும் சிலர், ஒதுக்கப்பட்ட நிதிக்கேற்ப, அதே விலையில் டேப், மொபைல், கால்குலேட்டர் உள்ளதா என கடைகடையாக ஏறி, இறங்கி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். மற்றொரு பள்ளி ஆசிரியர் கூறும்போது, அதிகாரிகள் பரிசு பொருட்கள் அறிவிக்கும்போது, அதன் தற்போதைய மதிப்பு, தரம் உள்ளிட்டவை கண்டுகொள்வதில்லை, ஏதே கடமைக்கு போட்டி நடத்தினால் போதும் என்ற நோக்கில் நடத்தினால் உள்ளனர். இதனால்தான், அரசுடைய நிதிதான் வீணாகும். இது முழுக்க, முழுக்க உயர் அதிகாரிகள் அலட்சிய போக்கும், திறன் இல்லாததே வெளிப்படுத்துகிறது. தரமற்ற பொருட்கள் வழங்கும்போது, அதன் பயன் மாணவர்களால் அனுபவிக்க முடியாது. இதுபோன்ற திட்டங்களை வகுக்கும் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் எனவும், இந்த பொருட்களை வாங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், இவ்வாறு, தனது கோபத்தை வெளிப்படுத்தி, கோரிக்கை வலியுறுத்தி உள்ளார்.