மாணவர்கள் ஆசிாியாின் பாதத்தை அழுத்திவிடும் காணொளி சமூக ஊடகங்களில் நேற்று வெளியான நிலையில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் உயர்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் ஜெயபிரகாஷ். இவர் மாணவர்களிடம் தனது காலை பிடித்து அழுத்திவிடுமாறும், பள்ளியில் தூங்கி பொழுதை கழிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுசம்மந்தமான காணொளி நேற்று வெளியானது. விசாரணை அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு ஆதராக மாணவர்கள் திடீரென அப்பகுதியில் இன்று நண்பகல் திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், குழந்தைகள் அவர் உடல்நிலை சரியில்லாதபோது, யாரோ ஒருவர் கைப்ேபசியில் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர் எனக்கூறி போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேசி மாணவர்களை அங்கிருந்து அனுப்பினர். இந்த விவகாரத்தில், சில ஆசிரியர்கள் மாணவர்களை போராட சொல்லி தூண்டியிருக்கலாம் அல்லது உள்ளூர்காரர்களின் சதியிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.