பள்ளி கல்வித்துறையில், 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் நிலவுவதாகவும், அனைவரும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி கல்வித்துறையில் மாநில திட்ட இயக்ககம் முதல் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலகங்கள் வரை கணக்காளர்கள், கணினி விபர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் என பல்வேறு நிலைகளில் 1,428 பணியாளர்கள், முழுநேர தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.இவர்களில் ஒரே கல்வித்தகுதி மற்றும் பணி நிலையில் உள்ள ஊழியர்கள், வெவ்வேறு விதமான தொகுப்பூதியம் பெறுகின்றனர். மாநில அரசின் மற்ற துறைகளில் இல்லாத இந்த ஊதிய முரண்பாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககத்தில் மட்டும் நீடிப்பது ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரபு கூறியது, தொகுப்பூதிய பணியாளர்களில் சிலருக்கு குறைந்தபட்சம் ரூ 11,500 சம்பளமாகவும், சிலருக்கு அதிகபட்சமாக ரூ 35,000 வரையிலும் வழங்கப்படுகிறது. ஒரே தகுதி, ஒரே பணிக்கு இவ்வாறு வேறுபட்ட ஊதியம் வழங்குவது நியாயமற்றது. இவர்களில் பெரும்பாலானோர் பெண் பணியாளர்கள். இந்த முரண்பாடுகளை களைய கோரி, கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில திட்ட இயக்குனர், முதலமைச்சர் என பலருக்கும் மனு அனுப்பியும் எவ்வித தீர்வும் எட்டவில்லை, என்றார்.