கோவை மதுக்கரை ஒன்றியம் ஓராட்டுகுப்பை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இல்லம் தேடி கல்வி மையத்தில் "குழந்தைகளுக்கான வாசிப்பை வசப்படுத்துவோம்" வாசிப்பு இயக்க சிறப்பு நிகழ்வு நடந்தது.
இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி திட்ட மதுக்கரை வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் T.மாரிமுத்து அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார். அனைவருக்கும் கல்வி இயக்கக மதுக்கரை வட்டார வளமைய மேற்பார்வையாளர் M.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.இல்லம் தேடி கல்வி திட்ட கோவை மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் க. லெனின்பாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுடன் பள்ளிக் கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாசிப்பு இயக்க புத்தகங்களை கொண்டு வாசிப்பு சார் கலந்துரையாடல் - கதை சொல்லல் நிகழ்வை நடத்தினார்.குழந்தைகளுக்கான வாசிப்பு ஆனது, முதலில் எழுத்துகளை வாசித்து வார்த்தைகளாக உள்வாங்குகிறார்கள், வார்த்தைகளை வாசித்து வரிகளை உள்வாங்குகிறார்கள், வரிகளை காட்சிப்படுத்தி அதன் உட்பொருளை கண்டடைகிறார்கள். அதற்கான வழிகளை வாசிப்பு இயக்கம் (Reading Movement) தருகிறது. வாசிப்பு கற்பனைகளை, சிந்தனா சக்தியை மேம்படுத்த உதவும் என்றும், கதைகளை வாசிப்பது குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை வளர்க்க உதவும், வாசிப்பு குழந்தைகளின் சொற்களஞ்சியத்தை மேம்படுத்தவும் , ஒரு குழந்தை அடிக்கடி படிக்கும் சொற்களின் அளவு அதிகரிக்கவும், குழந்தைகளுக்கு புதிய எல்லைகளைத் திறக்கவும் வாசிப்பு இயக்கம் உதவும் என்றும் பேசினார். மேலும் இல்லம் தேடி கல்வி மைய குழந்தைகள் " நுழை, நட, ஓடு, பற" எனும் வாசிப்பு இயக்க படிகளில் கதைகள் வாசித்து இந்நிகழ்வை சிறப்பித்தனர். குழந்தைகளுக்கான நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. இறுதியில், இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர் அன்பரசி அவர்கள் நன்றி கூறினார்.