பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, அரசு பள்ளி ஆசிரியர்கள் ராணிபேட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 100க்கும் மேற்பட்டோா் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, அரசு ஊழியா்களுக்கு வழங்கியதுபோல், ஆசிரியர்களுக்கும் தாங்கள் பணியாற்றிய ஒன்றியம், மாவட்டத்திலேயே பணியாற்றுவதற்கு விரும்பினால், மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்ல விருப்ப மற்றும் மனமொத்த மாறுதல் வழங்க வேண்டும்.
பிரிக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு 1.1.2020 அன்றைய முன்னுரிமை பட்டியலின்படி பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதன்பிறகு பள்ளிகளை பிரித்து - பிரிக்கப்பட்ட ஒன்றியங்களுக்கு வழங்கிட வேண்டும்
புதிய ஒன்றியங்களில் இணைந்த அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியத்தில் எந்த தேதியின் அடிப்படையில் (ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த நாள் / தகுதிகாண் பருவம் முடித்த நாள்) முன்னுரிமை வழங்கப்பட்டதோ அந்த தேதியினை அடிப்படையாக கொண்டு புதிய ஒன்றியங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தினர். இதனால், பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தின் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.