தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில்தான் உள்ளதா என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் தங்கள் இஷ்டம்போல் ஒவ்வொரு வருடம் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி, அடாவடி கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மெட்ரிக் பள்ளிகளும் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட மூன்று மடங்கு மேல் கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்து வருகின்றனா். அரசும், கல்வித்துறையில், பள்ளிக்கும், தங்களும் சம்மந்தம் இல்லை என்பது போல் இருந்து வருகிறது. இதனால், குழந்தையை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் கட்டணம் கட்ட முடியால் திணறி வருகின்றனர்.
ஆனால், மத்திய பிரதேசத்தில் இதன் நிலைமை தலைகீழாக உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக வசூலித்த கூடுதல் கட்டணம் ரூ 65 கோடியை மாணவர்களிடம் திருப்பி தருமாறு 10 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரி கன்ஷியாம் கூறும்போது, ஜபல்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பள்ளி கட்டணம் மற்றும் பாடநூல்களின் விலையை உயர்த்தியதாக பள்ளி நிர்வாகிகள், கடை உரிமையாளர்கள் மீது கடந்த மே மாதம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மத்திய பிரதேச நிஜி வித்யாலயா (தனியார் பள்ளி கட்டணம் ஒழுங்குமுறை), 2017 சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான குழு பள்ளிகளின் கணக்குகளை ஆய்வு செய்தது. அதில் 2018- 19 முதல் 2024-2025 கல்வியாண்டு வரை 81,117 மாணவர்களிடம் ரூ 64 கோடிக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது தொியவந்தது. இதையடுத்து, சட்டவிரோத கட்டணம் வசூலித்த 10 தனியார் பள்ளிகளுக்கு பணத்தை திருப்பி தருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தனியார் பள்ளிகள் 10 சதவீதத்திற்கும் மேல் கட்டணத்தை உயர்த்த மாவட்ட கவ்வி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். 15 சதவீதத்திற்கு மேல் உயர்த்த மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த பள்ளிகளில் உரிய அனுமதி பெறாமல் 10 முதல் 15 சதவீதத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக மாவட்ட ஆட்சியர் தீபக் சக்சேனா தெரிவித்தார்.