கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டுபாளையம் கிராமத்தில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பூப்பெய்தி உள்ளார். தற்போது முழு ஆண்டு நடைபெறும் நிலையில், பள்ளி நிர்வாகம் மாணவி ஒன்பதாம் வகுப்பு செல்வதால், தேர்வு எழுதுமாறு கூறியுள்ளதாக தெரிகிறது.
பெற்றோர்கள் மாணவி பூப்பெய்தியதால், தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பள்ளி வகுப்பறைக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சமூக அறிவியல் தேர்வு எழுதிய மாணவி உடல்நலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் புதன்கிழமை அறிவியல் தேர்வுக்கு சென்ற மாணவி இரண்டாவது முறையாகவும் பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் பள்ளிக்கு சென்று இதனை வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டபோது உரிய நடவடிக்கை இல்லை எனவும் தெரிகிறது. இதனால் பூப்பெய்திய சிறுமியும் அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள், காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர், பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர், இதைதொடர்ந்து நெகமம் போலீசார் பள்ளி முதல்வர், அலுவலக உதவியாளர் மற்றும் தாளாளர் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.