ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாக கூறிக்கொண்டு, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே பறித்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களிடம் இருக்கும் உரிமைகளையும் அரசு பறிப்பது கண்டிக்கதக்கது. இந்த அரசாணையின்படி, தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. இந்த புதிய ஆணையால் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. இதனால் 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும்தான் பயனடைவர். ஆனால், இந்த அரசாணையால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். ஆனால், இது சிறப்பான அரசாணை என தமிழக அரசு பரப்புரை செய்து வருகிறது. ஆசிரியர்களின் பிரச்னை என்னவென்று கூட தமிழக அரசுக்கும், கல்வி அமைச்சருக்கும் தெரியவில்லை என்பதையே அரசாணை பிறக்கப்பட்டது காட்டுகிறது. ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் பிறப்பித்த இந்த அரசாணை அவர்களுக்கு செய்யும் துரோகமாகும், இதனை ரத்து செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.