Plus Two Students Absent | 50 ஆயிரம் மாணவர்கள் ஏன் தேர்வு எழுதவில்லை
Plus Two Students Absent
1. ஆசிரியர் மாணவர் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல். பதின் பருவப் பிள்ளைகளிடம் ஏற்பட்டுள்ள நடத்தைக் கோளாறுகள் மாணவர்களிடம் ஆசிரியர்களின் நெருக்கத்தைக் குறைத்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் கட்டாயத்தினால் பல மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது.
2. பாடத்திட்ட சுமை ஒரு பக்கம். மாணவர்களின் கல்வி ஈடுபாடு குறைந்து வருவது ஒரு பக்கம். இரண்டுக்கும் இடையில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி கடினமாக மாறிவிட்டது. கற்பித்தல் சாராத பணிகள் பலவற்றில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
3. வகுப்பறையில் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் ஒரு சில மாணவர்களால் ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி குறித்த கூடுதல் அக்கறை ஆசிரியர்களிடம் குறைந்து வருகிறது.
Read Also: பிளஸ் 2 தமிழ் தேர்வு கடினம்
4. அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் விடுமுறை நாட்களில் வேலைக்கு செல்கின்றனர். திறன் பேசி வாங்க வேண்டும் என்பதற்காக வேலைக்கு செல்வதுண்டு. படிப்பைக் கடினமாக உணரும் நிலையில் வேலைக்குத் தொடர்ந்து செல்லத் தொடங்கி விடுகின்றனர்.
5. மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாடும் நம்பிக்கையும் குறைந்து வருவதற்கான காரணம், கல்வியின் மூலம் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் இழந்து வருகின்றனர். பெற்றோர்களும் படிப்பின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
6. படிப்புக்கேற்ற வேலையும் வேலைக்கேற்ற ஊதியமும் இன்றைக்கு வெகு சிலருக்கே வாய்க்கிறது. நேர்மையான வழியில் படித்து அரசு வேலை பெற முடியும் என்ற நிலையும் இன்று இல்லாமல் போய்விட்டது.
7. போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் தொடர்கதையாக உள்ளன. படித்த ஏழைகளுக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
8. மனப்பாடத் திறனை மட்டுமே அளவிடும் மதிப்பெண் கல்வியை நீண்ட காலமாக பின்பற்றி வருவதும் மனப்பாடம் திறனற்றவர்கள் கல்வியைத் தொடர முடியாமைக்கான மற்றொரு முதன்மையான காரணம்.
9. கல்வி நிர்வாகத்தில் உள்ளவர்கள் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். கல்விச் சிக்கல்கள் பற்றி ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பதும் தீர்வுகளை ஆராய்வதும் நடப்பதில்லை.