சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில், நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிநியமனங்களில் நடந்துள்ள முறைகேட்டை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு மனு அனுப்பியுள்ளது.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது, சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நியமனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிவாய்ந்த, அங்கீகரிக்கப்பட்ட பணிக்காலம், நடைமுறையில் உள்ள 200 புள்ளிகள் இடஒதுக்கீட்டு விதிகள் மற்றும் யுஜிசி விதிமுறைகள் (2018), மீறியுள்ளதை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு தணிக்கை அதன் அறிக்கைகளில், சட்டவிரோதம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், எவ்வித நடவடிக்கையுமின்றி செயல்பட்டுவரும் தற்போதைய துணை வேந்தர் மற்றும் ஆட்சிக்குழுவினை செயல்பட அனுமதிக்காது சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கான 15.12.2021 தேதியிட்ட இரண்டு பிரத்யேக விளம்பரங்கள் குறித்து வெளியானது. இடஒதுக்கீட்டு விதிகளின்படி பொதுப் பிரிவில் (GT) நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் 2004 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டதைப் போலவே, இந்தப் பதவிகளும் பொதுப் பிரிவில் (GT) விளம்பரப்படுத்தப்படுவதற்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பதவிகள் 100-புள்ளிகள் பட்டியலில் பட்டியலினப் பிரிவின் (SC) கீழும், 200-புள்ளிகள் பட்டியலில் பட்டியலினப் அருந்ததியர் SC(A) பிரிவின் கீழும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இரண்டும் செய்யப்படவில்லை, மீண்டும் இந்தப் பதவிகள் பொதுப் பிரிவில் (GT) ஒதுக்கப்பட்டுள்ளன. இது இரண்டையும் சட்டவிரோதமான முறையில் மீறுவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் சமூக நீதியை வேண்டுமென்றே திட்டமிட்டு ஒழிப்பதற்கான நடவடிக்கையாகும். இடஒதுக்கீட்டு விதிகளின் இந்தக் கடுமையான மீறல்களுக்கு மேலதிகமாக, நியமிக்கப்பட்ட நபர்கள் இந்தப் பதவிகளுக்குத் தேவையான தகுதிவாய்ந்த பணிக்காலம் போதுமானதாக இல்லை. UGC விதிமுறைகள், 2018, இன்படி பல்கலைக்கழக நூலகத்தில் ஏதேனும் ஒரு நிலையில் நூலகராக குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது நூலக அறிவியலில் உதவி / இணைப் பேராசிரியராக பத்து ஆண்டுகள் கற்பித்தல் அல்லது கல்லூரி நூலகராக பத்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மாறாக, தற்போது நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக நூலகர் உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கை (2022-23) இன்படி, நூலக அறிவியலில் உதவிப் பேராசிரியராக 8 ஆண்டுகள் 4 மாத அனுபவமும், கல்லூரி நூலகராக 5 ஆண்டுகள் 5 மாத அனுபவமும் மட்டுமே பெற்றிருந்தார். அவர் பல்கலைக்கழக நூலகர் பதவிக்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யவில்லை.உடற்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டவர் நியமனத்தின் போது பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் (பாப்பிரெட்டிப்பட்டி) தகுதிவாய்ந்த 7 ஆண்டுகள் பணி அனுபவமும் மட்டுமே பெற்றிருந்தார். UGC விதிமுறைகளை அமல்படுத்திட வேந்தர் வலியுத்தி வருகின்ற நேரத்தில் இந்த சட்டவிரோதங்களை அங்கீகரித்த ஆட்சிக்குழுவில், வேந்தரின் மூன்று பிரதிநிதிகள் உட்பட, அரசின் பதவிவழி உறுப்பினர்கள் (8), நியமன உறுப்பினர்கள் (2) உள்ளிட்ட அனைவரும் அலட்சியத்துடன் கண்மூடித்தனமாக செயல்பட்டுவருவதினால், அனைவரும் மீது கடும் நடவடக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.