Part time teachers condemns Dinamalar | பகுதி நேர ஆசிரியர்கள் தினமலருக்கு கண்டனம்
Part time teachers condemns Dinamalar
சேலம் பதிப்பு தினமலர் நாளிதழ் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மையப்படுத்தி, மாணவர்கள் மீதான வன்மைத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பகுதிநேர சிறப்பாசிாியர்கள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சங்க செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் அறிவித்த திட்டமான காலை உணவு திட்டம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ செல்வங்களுக்கு கிடைக்க பெற்ற நாடு போற்றும் நல்ல திட்டமாகும்.
காலை உணவு என்பது குழந்தையின் மூளை மற்றும் பொது ஆரோக்கியத்திற்கு ஊட்டமளித்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. அந்த வகையில் இத்திட்டம் உள்ளது. காலை உணவின் உதவியுடன் பசியை உணராமல் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் மாணவ செல்வங்கள் நன்றாக படிக்க முடியும். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு திட்டமான காலை உணவு திட்டம் குறித்து சிறுமையாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், செய்தி ஊடகம் என்பது சமுதாயத்தில் ஒர் முக்கிய அங்கமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் தவிர, இழிவான செய்தி வெளியிடுவது அழகல்ல. எனவே, தினமலர் செய்திதாள் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.