Part Time Teacher Counselling News | பகுதி நேர ஆசியர்கள் கலந்தாய்வு டிசம்பர் 7ம் தேதி
Part Time Teacher Counselling News
மாநில திட்ட இயக்குனர் சுதன் வெளியிட்ட செயல்முறைகளில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு கடந்த 10.9.2022 அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பின்படி, பகுதி நேர பயிற்றுநர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப, இணைய வழியில் ஒளிவு மறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, 2022-23ஆம் ஆண்டிற்கான பகுதி நேர பயிற்றுநர்களின் கலந்தாய்வு முதற்கட்டமாக பகுதி நேர ஓவிய ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் 7ம் தேதி அன்று நடத்தப்படும்.
Read Also: பகுதிநேர பயிற்றுநர்களுக்கு முக்கிய அறிவுரை
பணிமாறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
- பகுதிநேர பயிற்றுநர்கள் மூன்று பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். இவர்களில் முதற்கட்டமாக கலைப்பிரிவு (Art Education) பகுதிநேர பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு இணையவழியில் 7.12.2022 அன்று நடைபெறும்.
- இக்கலந்தாய்வினை தொடர்ந்து இதர பிரிவுகளான உடற்கல்வி பகுதி நேர பயிற்றுநர்களுக்கும் தொழிற்கல்வி பிரிவினருக்கும் தனித்தனியே கலந்தாய்வு நடத்தப்படும்.
- அந்தந்த மாவட்டத்திற்குள்ளாகவும், அதனை தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
- மாறுதல் பெறும் பகுதிநேர பயிற்றுநர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் புதிய பணியிடத்தில் சேர வேண்டும். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அதன் தொகுப்பறிக்கையினை மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.
- பகுதிநேர பயிற்றுநர்களின் விருப்பத்தின்பேரில் மாறுதல் ஆணை பெறுவதால் இவ்வாணையை ரத்து செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கோரும் கோரிக்கைகள் பரிசீலிக்க இயலாது.
- இம்மாறுதல் பெரும் பகுதி நேர பயிற்றுநர்கள் விருப்பத்தின்மேல் மேற்கொள்ளப்படுவதால் மாறுதல் பயணப்படிகள் வழங்கப்படமாட்டாது.
- மாறுதல் கோரும் பகுதிநேர பயிற்றுநர்கள், விண்ணப்பத்தினை சார்ந்த தலைமை ஆசிரியரிடம் பூர்த்தி செய்து 30.11.2022க்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு தளத்தில் இருந்து பெறப்படும் ஒப்புதல் நகலை தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நகலை தலைமை ஆசிரியர் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் 1 மற்றும் ஏபிஓ மற்றும் ஏடிபிசி ஆகியோர் உள்ளடக்கிய குழு, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இவ்விண்ணப்பங்கள் அனைத்து எமிஸ் இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை 1.12.2022 பிற்பகல் 5.30 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். இந்த குழு பகுதிநேர பயிற்றுநர்களின் மாறுதல் விண்ணப்பங்களை முறையாக பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
- மேலும், மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில், இதே குழு மாநில திட்ட இயக்ககத்திலிருந்து அனுப்பும் சுற்றறிக்கையின் அடிப்படையில் , முதன்மை கல்வி அலுவலரின் தலைமையில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும்.
- ஒரே பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிநேர பயிற்றுநர்கள் பணி மாறுதல் கோரினால் கீழ் குறித்த தரவுகள் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும்
பணியில் சோ்ந்த நாள்
பிறந்தநாள்
முன்னுரிமை என்னென்ன?
- கணவர்/மனைவியை இழந்தவர்
- முற்றிலும் கண் பார்வையற்றவர்
- மாற்றுதிறனாளிகள் (40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்)
- மனவளர்ச்சி குன்றிய/ மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/டையாலிசிஸ் சிகிச்சை/இருதய அறுவை சிகிச்சை/புற்றுநோயாளிகள் / மூளை கட்டி
- (முன்னுரிமை கோரும் விவரங்கள் தவறு என கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்) இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.