பெரம்பலூர் மாவட்டம், தேனூர் அரசு மேல்நிைல பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களான நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் குறித்து வகுப்பறையில் கரும்பலகையில் ஆபாசமாக விமர்சித்து, கேலிச்சித்திரம் வரைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜூலை 30ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.இதை அறிந்த வணிகவியல் ஆசிரியர் கபில்தேவ், மாணவரை கண்டித்ததுடன் முட்டிக்கால் போட வைத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த மாணவரின் தந்தை ராஜசேகர், பள்ளிக்கு வந்து ஆசிரியர் கபில்தேவிடம் தகராறு செய்தார்.ராஜசேகர், ஊராட்சி மன்ற செயலாளராகவும், அவரது மனைவி பள்ளி மேலாண்மை குழு தலைவராகவும் உள்ளனர். பள்ளி வந்த ராஜசேகர் ஆசிரியர் கபில் தேவிடம் மிரட்டல் விடுத்து, அவரை முட்டிக்கால் போட வைத்ததாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பள்ளியில் மாணவர் ஒழுக்கம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை, ஆசியரை அவரது பெற்றோர் அவமதித்ததாக எழுந்துள்ள புகார் இரு கோணங்களிலும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்