பள்ளி கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த தீவிர ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளி மாவட்டம் மற்றும் தமிழகம் ஒட்டியுள்ள மாநிலங்களில் இருக்கும் விவரங்களை சேகரித்து வருகிறது.
குறிப்பாக கோவை ஒட்டியுள்ள தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கேரளா பகுதியில் உள்ளனர். இருமாநில எல்லையில் போலீசாரின் தீவிர கண்காணிப்பு, இ-பாஸ் பெறுதல், மாநிலம் விட்டு மாநிலம் நுழைந்தால் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால், மாணவர்கள் கோவை வந்து பொதுத்தேர்வு எழுத பெரும் சவாலாக இருந்தது. இதனால் தமிழக - கேரள எல்லையான வாளையாறு, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதி மாணவர்கள் சிரமம் அடைந்தனர். பள்ளி மாணவர்களுக்கு இரு மாவட்ட ஆட்சி தலைவர்களும் தேர்வு எழுத பத்திரிக்கைகள் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்கள் உடனடியாக பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளியை தொடர்பு கொண்டு தேர்வு எழுத வரும் மாணவர்களின் நடைமுறை சிக்கல் குறித்து பேசினார். இதனை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் கேரளாவில் இருக்கும் மாணவர்களை தேர்வு எழுத சோதனை மையத்தில் இருக்கும் போலீசார் அனுமதிக்க வேண்டும் என கடிதம் மூலம் அனுமதித்துள்ளார். இதில் தேர்வர் வாகனத்தில் ஒருவருடன் மட்டும் செல்ல வேண்டும், சோதனை மையத்தில் போலீசாரிடம் தேர்வுகூட நுழைவு சீட்டை காண்பிக்க வேண்டும் என சில நிபந்னையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியால், பள்ளி மாணவர்கள் மற்றும் கோவை கல்வி அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர். இதைபோன்று, தமிழகத்தில் ஒட்டியுள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில எல்லைகளிலும் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அந்தந்த மாநில முதல்வர்களுடன் தமிழக அரசு பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.