Out of School Children In Tamil - பள்ளி செல்லா குழந்தைகள் யார்?
பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் என்போர் கல்வி வாய்ப்பிழந்த குழந்தைகள், வறுமையில் வாழ்வோர், செங்கல் சூளை, நெசவுத் தொழில், கட்டடத்தொழில், விவசாயத் தொழில் போன்ற பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்வோர். பேருந்து நிலையங்களில் பூ, பழம், தண்ணீர், வெள்ளரிக்காய் விற்பவர்கள், தொடர்வண்டி நிலையங்களில் சிறு வியாபாரம் செய்வோர், புலம்பெயர்ந்து வாழ்வோர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், சிறுவர் சீர்திருத்த இல்லங்களில் உள்ளோர், மலைவாழ் குழந்தைகள், சமூகக்கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டோர், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டோர், பாலியல் தொழிலில் ஈடுபடுவோருடன வாழும் குழந்தைகள், பெற்றோரை இழந்தோர், உடன் பிறந்தோர் வளர்ப்பிற்காகப் பள்ளியை விட்டு நின்றோர், அகதிகளின் குழந்தைகள், அகதிகளாக வாழ்வோர் போன்றோர் ஆவர். இவர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் என்று அறியப்படுகிறார்கள். இவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டியது பள்ளி மேலாண்மைக் குழுவின் கடமையாகும்.
Also Read:எப்படி பள்ளி தரங்கள் குறித்து அறிவது
பள்ளி மேலாண்மை குழு பங்கு
- பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைககளின் சேர்க்கை குறித்து விவாதித்தல்.
- பள்ளி மேலாண்மைக் குழுவானது, பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்தி வட்டார வளமையத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள 6-14 வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்ததை உறுதி செய்தல் வேண்டும்.
- ஊராட்சித் தலைவர் தலைமையில் நடக்கும் கூட்டங்களில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து விவாதித்தல், மேலும் அக்குழந்தைகள் பயில்வதற்கான சிறப்புப்பயிற்சி மையங்கள் மற்றும் சலுகைகள் சார்ந்து மக்களுக்கு எடுத்துக் கூறுதல். மேலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் பள்ளிசெல்லா / இடைநின்ற குழந்தைகளை எவரேனும் கண்டறிந்தால் அவர்களைப் பள்ளியில் சேர்க்க உரிய ஒத்துழைப்பு வழங்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளுதல்.
- மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதி பொறுப்பு ஆசிரியப் பயிற்றுநர் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்து சிறப்புப் பயிற்சி மைய குழந்தைகள் அனைவரையும் முறையான பள்ளிகளில் மீளவும் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
- பள்ளிசெல்லா / இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு விவரத்தினை குடியிருப்பு வாரியாகத் தொகுத்து அவர்களைப் பள்ளிகளில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு மாதக்கூட்டத்திலும் தீர்மானமாக நிறைவேற்றுதல்.
- புலம் பெயர்ந்த குழந்தைகள் கண்டறியப்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கான முயற்சி எடுத்தல். மேலும், அக்குழந்தைகளுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுத்தல்.
பள்ளி மேலாண்மைக் குழுவில் பெற்றோர் பங்கு
- பள்ளி வயது குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் மற்றும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புதல்.
- கற்றல் திறன்களை முழுமையாகப் பெறுவதற்கு ஆசிரியர்களையும் குழந்தைகளையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துதல்.
- குழந்தைகளுக்குக் கல்வி இன்றியமையாதது என்பதை உணர்த்துதல் மற்றும் பள்ளியில் நடைபெறும் விழாக்கள் மற்றும் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு பெற்றோர் தங்கள் கருத்துகளை வழங்குதல்.
- குழந்தையின் அடைவுத்திறனைப் பற்றி ஆசிரியருடன் கலந்துரையாடுதல். கலைத்திட்ட / பாடத்திட்ட வரைவுப் பணிகளில் பங்கேற்றல்.
- பள்ளிக்குத் தேவையான பொருளுதவி அல்லது மனிதவளம் சார்ந்த உதவிகளைத் தொடர்ந்து வழங்குதல்.
- புரவலர் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்களைச் சேர்த்தல்.
- மாதம் ஒருமுறை நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்றல்.
- அரசு வழங்கும் நலத்திட்டங்களை முறையாகக் கிடைப்பதை உறுதி செய்தல்.