Ooty Urudu School Students fainted by Consuming Tablets | ஊட்டி உருது பள்ளி மாணவிகள் மயக்கம்
Ooty Urudu School Students fainted by Consuming Tablets
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது நோடல் ஆசிரியர் மூலம் வழங்கப்படும்.
இந்தநிலையில் நகராட்சி உருது பள்ளியில் குழந்தைகளிடம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாணவியும் என்னால்தான் முடியும் என்று மாறி மாறி பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் யாரால் முடியும் என்பதை நிரூபித்து காட்டி விடலாம் என்று கூறி மாத்திரைகளை சாக்லேட் சாப்பிடுவது போல் தொடர்ந்து சாப்பிட்டு உள்ளனர்.
ஒரு கட்டத்தில் மாத்திரை செயல்பட தொடங்கியதால் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் வகுப்பறையில் மயங்கினர். அதிர்ச்சியடைந்த மற்ற மாணவிகள் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாணவிகளை மீட்டு உதகை அரசு மருததுவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட பின், அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவிகள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது நால்வரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.