கல்வி மேம்பாட்டுக்குழு தனியார் கல்லூரி பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் -கோவை பேரா. க.லெனின்பாரதி வெளியிட்ட அறிக்கை:
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் வழிகாட்டுதல்கள் குறித்த அரசாணை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தகுந்த நடவடிக்கை. பள்ளி அளவில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறையும் சரியானது. அனைத்து ஆன்லைன் வகுப்புகளையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல் சரியானதே. தவறுகள் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று என்று இதை குறிப்பிடலாம். ஆனால் தற்போதைய நிலையில் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான ஆசிரியர்கள் தனது மொபைல் போன் மூலமாக எடுத்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே கணினி வழியாக கற்பித்து வருகின்றனர். அனைத்து வகுப்புகளையும் பதிவு செய்ய வேண்டுமானால் நல்ல
storage capacity உள்ள மொபைல் போன் அல்லது கணினி அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவைப்படுகிறது.
ஏற்கனவே சொற்ப ஊதியத்தில் பணி புரியும் தனியார் ஆசிரியர்கள் storage capacity உள்ள புதிய மொபைல் போன் அல்லது கணினி இதற்காக வாங்குவது என்பது சாத்தியமற்றது .கடந்த ஓராண்டிற்கும் மேலாக சொற்ப ஊதியத்திலும் குறைவான ஊதியமே பெற்று இணைய இணைப்பிற்கு செலவழிக்கவே திண்டாடும் சூழல் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு உள்ளது .
எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வகுப்புகளை பதிவு செய்வது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை பள்ளிகளுக்கும் ,ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும் .வகுப்புகளை பதிவு செய்வது என்ற நிலைப்பாட்டில் மாற்றுக்கருத்தில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தனியார் பள்ளிகள் தனக்கென ஒரு
Youtube Channel உருவாக்கி அதன் மூலம் தனது ஆசிரியர்கள் மூலம் பாடங்களை பதிவேற்றம் செய்தும் மாணவர்களுக்கு கற்பிக்கும் மாற்று வழியையும் யோசிக்கலாம், ஏற்கனவே அரசு கல்விதொலைக்காட்சி மூலம் பாடங்களை பதிவேற்றம் செய்தது போல செய்யலாம்.
அதேபோல துவக்க(1 - 5 ) மற்றும் நடுநிலை (6 -8 ) வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் நாள் ஒன்றுக்கு அதிக பட்சம் இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று அரசின் வழிகாட்டுதல்கள் உள்ளது. கல்வி உளவியலின்படி அது தான் மிகச்சரி. ஒரு வகுப்பிற்கான நேரம் 30 -45 நிமிடங்கள் மட்டுமே. அப்படியெனில் வகுப்புகள் ஒன்றரை மணி நேரத்திற்கு மிகக்கூடாது .ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் கிட்டத்தட்ட 3 ல் இருந்து 5 மணி நேரம் வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
குழந்தைகள் பெரும் மனச்சிதைவுக்கும் ,உளவியல் நெருக்கடிக்கும் உள்ளாவார்கள் . எனவே ஆன்லைன் வழியில் குழந்தைகளுக்கான கற்றல் -கற்பித்தல் நிகழ்வை வரையறைக்கு உட்படுத்துவதோடு, முறையாக கண்காணிக்க கல்வித்துறை குழு அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தொடர்புகொள்ள E-MAIL ID:
leninbarathiphysics@gmail.com